வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் - ராகுல் தொடக்க ஜோடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளது. இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்துள்ளனர். 

பர்மிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அடித்து நொறுக்கிவருகின்றனர். வழக்கமாக முதல் சில ஓவர்கள் நிதானமாக ஆடிவிட்டு பிறகு அதிரடியை தொடங்கும் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே சிக்ஸர் பறக்கவிட்டார். 

முஸ்தாபிசுர் வீசிய ஐந்தாவது ஓவரில் அபாயகரமான ரோஹித் சர்மாவின் கேட்ச்சை கோட்டை விட்டார் தமீம் இக்பால். அதன்பின்னர் அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா, தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் கடந்தார். 

ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பிறகு சற்று அமைதி காத்த ரோஹித், மொசாடெக் ஹுசைன் வீசிய 22வது ஓவரில் ஒரு மிகப்பெரிய சிக்ஸர் விளாசி மிரட்டினார். அந்த ஓவரை அத்துடன் விடாமல் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்து முடித்தார். ரோஹித் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ராகுலும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்திய அணி 22 ஓவருக்கே 140 ரன்களை குவித்துவிட்டது.

வங்கதேச அணியின் ஃபாஸ்ட் பவுலர்களும் ஸ்பின்னர்களும் மாறி மாறி வீசியும் இந்திய அணியின் தொடக்க ஜோடியையே பிரிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.