இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து இந்திய அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அவசரப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் தொடங்கிய ரோஹித்தும் ராகுலும், ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். அரைசதம் வரை நிதானமாகவும் கவனமாகவும் ஆடிய ரோஹித் சர்மா, அதன்பின்னர் தனது அதிரடியை மெல்ல மெல்ல தொடங்கினார். ராகுல் அரைசதம் அடித்த பின்னர் தான் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதத்திற்கு பின்னர் ராகுலை ஓவர்டேக் செய்த ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பதிவு செய்தார். 

ரோஹித்தை தொடர்ந்து சதமடித்த ராகுல், சதமடித்த மாத்திரத்தில் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 227 ரன்களை குவித்தனர். 37வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதிரடியாக ஆடி, இரட்டை சதத்தை நோக்கி பயணித்த ரோஹித் சர்மா, 159 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டனர். ரோஹித் சர்மா மற்றும் ராகுலின் அதிரடியை மழுங்கடிக்கும் வகையில், தெறிக்கவிட்டனர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும். 

அல்ஸாரி ஜோசப் வீசிய 45வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய ரிஷப் பண்ட், கோட்ரெல் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை குவித்தார். ரோஸ்டான் சேஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீச, அதற்கு சிங்கிள் எடுக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரிஷப் சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் குவிக்கப்பட்டது. 

கீமோ பால் வீசிய 48வது ஓவரில் ரிஷப் பண்ட்டும் 49வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 16 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 32 பந்தில் 53 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 3 பவுண்டரிகளை விளாச, இந்திய அணி 50 ஓவரில் 387 ரன்களை குவித்தது. 

388 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.