இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தவான் 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் 19 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலும் படுமோசமாக சொதப்பி வெறும் ஐந்து ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கோலி, 63 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி இன்னிங்ஸின் 32வது ஓவரில் அணியின் ஸ்கோர் 152 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை பொளந்துகட்டினர்.

பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 32 ஓவரில் 152 ரன்கள் அடித்த நிலையில், பாண்டியா மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் கடைசி 18 ஓவர்களில் அடுத்த 150 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 92 ரன்களும், ஜடேஜா 50 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தனர். பாண்டியா மற்றும்  ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் இந்திய அணி ஐம்பது ஓவரில் 302 ரன்களை குவித்து 303 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.