இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இரண்டாவது செசனிலேயே வங்கதேச அணி ஆல் அவுட்டாகிவிட்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. ஆனால் புஜாரா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் புஜாரா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் செய்த அதே தவறைத்தான் ரஹானேவும் செய்தார். ரஹானேவும் 51 ரன்களில் நடையை கட்டினார். 

வழக்கம்போலவே பொறுமையாகவும் நேர்த்தியாகவும் ஆடிய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்தார். பிங்க் பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சதமடித்த கோலி 136 ரன்களில் ஆட்டமிழந்தார். புதிய பந்து கிடைத்ததும் அபாரமாக வீசினர் வங்கதேச பவுலர்கள். புதிய பந்து கையில் கிடைத்ததுமே கோலியை எபாதத் வீழ்த்தினார். கோலி அவுட்டானதும் அவரை தொடர்ந்து அஷ்வின், உமேஷ், இஷாந்த் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். புதிய பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆனது. விக்கெட் கீப்பரின் கைகளில் சிக்காமல் பயங்கரமாக பவுன்ஸ் ஆகி பவுண்டரிக்கு சென்றது. 

 

புதிய பந்தின் தன்மை மாறுவதற்குள்ளாக, அதன் தன்மைகளை பயன்படுத்தி வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்ற ஐடியாவில், சஹாவும் ஷமியும் ஆடிக்கொண்டிருந்தபோது, கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் அடித்திருந்த நிலையில், டிக்ளேர் செய்யப்பட்டது. 

 வங்கதேச அணி 241 பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடவுள்ளது. புதிய பந்தில் அசத்தக்கூடிய இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் ஆகியோரின் துல்லியமான வேகத்திற்கு வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுப்பது ரொம்ப கஷ்டம்தான். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.