விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி ஆகிய இரண்டு தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்ற தமிழ்நாடு அணி, ரஞ்சி தொடரிலும் அசத்தும் முனைப்பில் இறங்கியது. ஆனால் கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேச அணிகளுக்கு எதிராக ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. 

மூன்றாவது போட்டியிலாவது முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இறங்கிய தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான இந்த போட்டியிலும் தோற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தூரில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக பேட்டிங் ஆடினர். 

Also Read - நான் ஒரு இந்து என்பதால் சில பாகிஸ்தான் வீரர்கள் என் கூட பேசவே மாட்டாங்க.. அக்தர் கொடுத்த தைரியத்தால் கொடுமைகளை புட்டுப்புட்டு வைத்த டேனிஷ் கனேரியா

தமிழ்நாடு அணியின் கேப்டன் பாபா அபரஜித் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 61 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜ் மட்டும் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். அவர் 43 ரன்கள் அடித்தார். ஹரி நிஷாந்த் 22 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கே முகுந்த், கௌசிக் காந்தி, நாராயண் ஜெகதீசன், ஜெகதீசன் கௌசிக், எம் முகமது என யாருமே சரியாக ஆடவில்லை. படுமோசமான பேட்டிங்கின் விளைவாக முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read - ஐயா நீங்கதான் எனக்கு உதவி பண்ணனும்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மன்றாடும் கனேரியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் தொடக்க வீரர் ரமீஸ் கான் நிலைத்து ஆடி 87 ரன்களை சேர்த்து அணியை கரைசேர்த்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான வெங்கடேஷ் ஐயரும் மிஹிர் ஹிர்வானியும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். வெங்கடேஷ் 88 ரன்களை குவித்தார். ஹிர்வானி 71 ரன்கள் அடித்தார். ரமீஸ் கான், வெங்கடேஷ், ஹிர்வானி ஆகிய மூவரின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களை குவித்தது. 

184 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி, ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. தமிழ்நாடு அணியின் ஸ்கோர் 19 ஆக இருந்தபோது, கங்கா ஸ்ரீதர் ராஜு 15 ரன்னில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் அடித்துள்ளது. நாராயண் ஜெகதீசனும் கௌசிக் காந்தியும் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு அணி இன்னும் 160 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்த போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.