அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2012ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதையடுத்து அதன்பின்னர் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டார். 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவின் சக வீரருமான ஷோயப் அக்தர், கனேரியா பாகிஸ்தான் அணியில் ஆடியபோது சந்தித்த கொடுமைகளை வெளிப்படையாக பேசினார். கனேரியா ஒரு இந்து என்பதால், அவரை ஒரு சக வீரராக மதித்து நடக்காமல், சில வீரர்கள் கனேரியாவை ஒதுக்கியதாகவும், அவருடன் இணைந்து சாப்பிடக்கூட மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். கனேரியாவால் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த வெற்றிகளின்போது கூட, அதற்கான கிரெடிட்டை அவருக்கு கொடுக்கவில்லை என்றும், இந்துவாக இருந்தால் என்ன.. அவர் அணிக்காக செய்த பங்களிப்புதான் முக்கியம் என்றும் மிகவும் வெளிப்படையாக கனேரியா சந்தித்த பாகுபாட்டையும் பிரச்னைகளையும் போட்டுடைத்தார் அக்தர். 

அக்தரின் இந்த வெளிப்படையான பேச்சால் தைரியமடைந்த கனேரியா, ஷோயப் அக்தர் ஒரு லெஜண்ட். அவர் என்னை பற்றி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றுமே உண்மை. நான் ஆடிய காலத்தில் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு எனக்கு தைரியமில்லை. ஆனால் அக்தர் பேசியதால், நானும் தைரியமாக பேசுகிறேன். அக்தர் எப்போதுமே எனக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். அதேபோல இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய வீரர்களும் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். நான் இந்து என்பதால் என்னிடம் சரியாக பழகாமல், ஒதுக்கிவைத்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று கனேரியா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கனேரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் தனக்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் உதவி கேட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெஜண்ட் பவுலரான ஷோயப் அக்தர் பேசியதை டிவியில் பார்த்தேன். உண்மையை உரக்க சொன்னதற்காக, தனிப்பட்ட முறையில் எனது மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து சிறந்த வீரர்களுக்கும் மனமார எனது நன்றையை உரித்தாக்குகிறேன். நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள், மீடியா, பாகிஸ்தான் மக்கள் என, மதம் கடந்து எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 

எனக்கு எதிராக சிலர் செயல்பட்டார்கள். ஆனால் அவையெல்லாம், மக்களும் ரசிகர்களும் என் மீது காட்டிய அன்பை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அதுபோன்ற எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்ளாம் வாழ்க்கையில் பாசிட்டிவாக இருப்பவன் நான். 

அதேவேளையில், எனது சொந்த வாழ்க்கை இப்போது சரியானதாக இல்லை. பாகிஸ்தான் உள்ளவர்கள் மற்றும் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நபர்களிடம் எனது பிரச்னையை தீர்க்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை. இதேபோல், இதற்கு முன்பு பிரச்னைகளில் சிக்கிய பல பாகிஸ்தான் வீரர்களின் பிரச்னைகள் தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். பாகிஸ்தான் மக்கள் எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த லெஜண்ட் வீரர்கள் அனைவரையும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது உதவி எனக்கு தேவை. எனவே எனக்கு உதவ முன்வாருங்கள் என்று கனேரியா கேட்டுக்கொண்டுள்ளர். மேலும் கடைசியில், இதை யாரும் தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.