ஜெய்ப்பூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜயும் அபினவ் முகுந்தும் களமிறங்கினர். கடந்த போட்டியில் சதமடித்த முரளி விஜய் இந்த போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அபினவ் முகுந்துடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். எல்லா போட்டியிலும் சிறப்பாக ஆடும் பாபா, இந்த போட்டியிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபினவ் முகுந்தும் பாபாவும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 128 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். அபினவ் முகுந்த் 84 ரன்களிலும் பாபா அபரஜித் 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

நான்காம் வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 36 ரன்கள் அடித்து தனது பேட்டிங் திறமையை ஓரளவுக்கு நிரூபித்தார். விஜய் சங்கர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். முருகன் அஷ்வின் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களை அடித்தார். 

அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் தினேஷ் கார்த்திக், முருகன் அஷ்வினின் அதிரடியால் தமிழ்நாடு அணி 50 ஒவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்தது. திரிபுரா அணி 316 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவருகிறது.