பாபா அபரஜித்தின் அபார சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி அரைசதத்தால் விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் சௌராஷ்டிரா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி.
உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று நடந்தன. ஹிமாச்சல பிரதேசம் - சர்வீஸஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹிமாச்சல் அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
தமிழ்நாடு - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணி, 50 ஓவரில் 310 ரன்களை குவித்தது. சௌராஷ்டிரா அணியின் சீனியர் வீரரான ஷெல்டான் ஜாக்சன் அபாரமாக விளையாடி சதமடித்தார். 125 பந்தில் அவர் 134 ரன்களை குவிக்க, விஷ்வராஜ் ஜடேஜா (52) மற்றும் வசவாடா (57) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, 310 ரன்களை குவித்தது சௌராஷ்டிரா அணி.
311 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் விஜய் சங்கர் 4 ரன்னில் நடையை கட்டினார். பாபா அபரஜித் மற்றும் பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இந்திரஜித் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கும் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்தார் பாபா அபரஜித். அவருடன் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய பாபா அபரஜித் 112 ரன்னில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் 70 ரன்னிலும், தமிழ்நாடு அணியின் ஃபினிஷர் ஷாருக்கான் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, சாய் கிஷோரும் சிலம்பரசனும் இணைந்து கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றிக்கு உதவினர். கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் 26ம் தேதி நடக்கும் ஃபைனலில் தமிழ்நாடு அணியும் ஹிமாச்சல் அணியும் மோதுகின்றன.
