சூரத்தில் நேற்று மதியம் முதல் அரையிறுதி போட்டி நடந்தது. கர்நாடகா மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இரவு நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடும் ராஜஸ்தானும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் வெறும் 112 ரன்கள் மட்டுமே அடித்தது. பவுலிங்கில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அணி, இந்த தொடர் முழுவதும் அசத்தியதை போலவே, இந்த போட்டியிலும் ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டரை சரித்தது. 

சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் ஆகிய இருவரும் இந்த தொடர் முழுவதுமே அசத்தினர். அவர்கள் இந்த போட்டியில் ஆளுக்கு தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், டி நடராஜன் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். விஜய் சங்கர் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆக மொத்தத்தில் ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டரை அனைவரும் சேர்ந்து சரித்துவிட்டனர். 

ராஜஸ்தான் அணியில் எந்த பேட்ஸ்மேனுமே சரியாக ஆடவில்லை. ஒருவர் கூட 30 ரன்னைக்கூட எட்டவில்லை. தமிழ்நாடு அணியின் பவுலிங்கில் ராஜஸ்தான் அணி 112 ரன்களுக்கு சுருண்டது. 

113 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்தும் ரவிச்சந்திரன் அஷ்வினும் இறங்கினர். ஹரி நிஷாந்த் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் அஷ்வினுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், இந்த தொடர் முழுவதும் ஆடியதைப்போலவே, மிகவும் நேர்த்தியான முதிர்ச்சியான பேட்டிங்கை ஆடினார். 

அஷ்வினுடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிநடை போடவைத்தார் சுந்தர். இலக்கு எளிதானது என்பதால், அவசரப்படாமல் பொறுமையாக ஆடிய அஷ்வின் 31 ரன்கள் அடித்து, வெற்றியை உறுதி செய்யும் விதமான ஸ்கோர் வரை அழைத்து சென்றுவிட்டு அவுட்டானார். முதல் ரன்னை கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்த தமிழ்நாடு அணிக்கு, இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்களை சேர்த்து கொடுத்தனர் அஷ்வினும் சுந்தரும். 

அதன்பின்னர் சுந்தருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் அஷ்வின், தினேஷ் கார்த்திக் என சீனியர் வீரர்கள் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் பொறுப்பாகவும் நேர்த்தியாகவும் ஆடிய சுந்தர் அரைசதம் அடித்தார். தமிழ்நாடு அணி 18வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 54 ரன்கள் அடித்திருந்தார். சுந்தர் தனது தேர்ந்த பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். இந்த போட்டியில் வென்றதன்மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணி, இறுதி போட்டியில் கர்நாடக அணியை எதிர்கொள்கிறது. இறுதி போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதி சூரத்தில் நடக்கிறது.