கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த தொடரில் இதுவரை தமிழ்நாடு அணி ஆடிய ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. ரயில்வேஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ரெயில்வேஸ் அணி 50 ஓவரில் 200 ரன்கள் அடித்தது. அந்த அணியில் மனீஷ் ராவ் மட்டுமே அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அரைசதத்திற்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 55 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணி 200 ரன்கள் மட்டுமே அடித்தது. 

201 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவருமே சரியாக ஆடவில்லை. அபினவ் 11 ரன்களிலும் முரளி விஜய் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபா அபரஜித்தும் விஜய் சங்கரும் இணைந்து அபாரமாக ஆடினர். 

இருவருமே சிறப்பாக ஆடினர். இந்த ஜோடியை ரெயில்வேஸ் அணியால் பிரிக்கவே முடியவில்லை. அவசரப்படாமல் நிதானமாகவும் அதேநேரத்தில் ரொம்பவும் மந்தமாக ஆடாமல் சீரான வேகத்தில் ஸ்கோரும் செய்தனர். இந்த விஜய் ஹசாரே தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவரும் பாபா அபரஜித், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதமடித்தார். விஜய் சங்கர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். 

பாபா அபரஜித்தும் விஜய் சங்கரும் இணைந்தே போட்டியை முடித்துவைத்தனர். 45வது ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபா அபரஜித் 111 ரன்களையும் விஜய் சங்கர் 72 ரன்களையும் குவித்தனர்.