Asianet News TamilAsianet News Tamil

ஜெகதீசன் அபார சதம்; அபரஜித், ஷாருக்கான் அரைசதம்..! பஞ்சாப்பை பந்தாடிய தமிழ்நாடு அபார வெற்றி

விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
 

tamil nadu beat punjab in first match of vijay hazare trophy
Author
Indore, First Published Feb 21, 2021, 1:56 PM IST

சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கியுள்ளது தமிழ்நாடு அணி. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 71 ரன்னில் சிம்ரன் சிங் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய குர்கீரத் சிங் சதமடித்தார். குர்கீரத்துடன் இணைந்து சிறப்பாக ஆடிய சன்வீர் சிங் அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழக்க, குர்கீரத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்களை குவித்தார். குர்கீரத் சிங்கின் சதம், பிரப்சிம்ரன் சிங் மற்றும் சன்வீர் சிங்கின் அரைசதத்தால் 50 ஓவரில் 288 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.

289 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் அருண் கார்த்திக்  5 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஜெகதீசனும் பாபா அபரஜித்தும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய அபரஜித் 88 ரன்னில் ஆட்டமிழக்க, சதமடித்த ஜெகதீசன் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஷாருக்கான சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து தனது ஃபினிஷர் பணியை செவ்வனே செய்தார். ஜெகதீசனின் பொறுப்பான சதம், பாபா அபரஜித் மற்றும் ஷாருக்கானின் அரைசதத்தால் 49 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றியுடன் விஜய் ஹசாரே தொடரை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios