சையத் முஷ்டாக் அலி தொடர் இன்று தொடங்கியது. பல்வேறு மாநில அணிகளுக்கு இடையே போட்டி நடந்துவருகிறது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, முதல் போட்டியில் கேரளாவை எதிர்கொண்டது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 

தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ஜெகதீசன் நாராயணன் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அதன்பின்னர் பாபா அபரஜித், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஓரளவிற்கு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

இவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட லெவலில்தான் அடித்து ஆடினர். ஆனால் முகமது சலீம் தாறுமாறாக அடித்து ஆடினார். வெறும் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் முகமதுவின் அதிரடியான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 

175 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கேரளா அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான உத்தப்பா, விஜய் ஹசாரேவில் சொதப்பியதை போலவே இந்த போட்டியிலும் சொதப்பினார். வெறும் 9 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நிதானமாக தொடங்கி நல்ல ஸ்டார்ட்டை பெற்ற விஷ்ணு வினோத், ரோஹன், சச்சின் பேபி ஆகியோர் அந்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிவிட்டனர். 

விஷ்ணு, ரோஹன், சச்சின் பேபி ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் வந்த எந்த கேரள வீரரும் சரியாக ஆடவில்லை. கேரள அணி சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. அதன்விளைவாக 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் 37 ரன்கள் வித்தியாசம் என்பது பெரிய வெற்றி.