2020 ஐபிஎல்லில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியில் விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்த சம்பவம் குறித்து சூர்யகுமார் யாதவ் மௌனம் கலைத்துள்ளார்.
2020 ஐபிஎல்லில் ஆடியபோது சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்ததில்லை. எனவே சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வேட்கையில், அந்த சீசனில் எல்லாம் மிகத்தீவிரமாக ஆடிவந்தார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆர்சிபி அணி நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் எளிதாக அடித்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
அந்த போட்டியில் சூர்யகுமாரை கோலி ஸ்லெட்ஜிங் செய்தார். விராட் கோலி பொதுவாகவே களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். நெருக்கடியான, பரபரப்பான நேரங்களில் எதிரணி வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்வார் கோலி.
அதைத்தான் அந்த குறிப்பிட்ட போட்டியிலும் செய்தார். ஆர்சிபியின் கைகளிலிருந்து ஆட்டத்தை சூர்யகுமார் பறித்துக்கொண்டிருக்க, சூர்யகுமார் யாதவ் அருகில் சென்று அவரை முறைத்தார். ஆனால் சற்றும் அசராத சூர்யகுமார் யாதவ், திடமான மனநிலையுடன் களத்தில் நின்று போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்.
அந்த ஸ்லெட்ஜிங் சம்பவம் குறித்து சூர்யகுமார் யாதவ், கௌரவ் கபூருடனான ப்ரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
கோலி ஸ்லெட்ஜிங் செய்த சம்பவம் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், அதுதான் கோலியின் ஸ்டைல். களத்தில் அவரது எனர்ஜி வேற லெவலில் இருக்கும். 2020 ஐபிஎல்லில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் இடையேயான அந்த குறிப்பிட்ட போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி. அதனால் அந்த போட்டியில் விராட் கோலியின் ஸ்லெட்ஜிங் வேற லெவலில் இருந்தது. ஆனால் எனது முழுக்கவனமும் ஆட்டத்தில் தான் இருந்தது. கவனத்தை சிதறவிடக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
என்னுடைய இதயம் வேகமாக துடித்தது. அந்தளவிற்கு பதற்றத்தில் இருந்தேன். அவரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை; நானும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. வெறும் 10 நொடிகள் மட்டும் தான் அந்த சம்பவம் நடந்தது. 10 நொடிகள் நிதானமாக இருந்துவிட்டால், அடுத்த ஓவர் தொடங்கிவிடும். அதன்பின்னர் அவரை(கோலியை) எதிர்கொள்ள நேரிடாது என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்னர் அந்த விஷயத்தை பற்றி நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
