காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் ஆட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனையும், வழக்கம்போலவே தோல்வியுடன் தான் தொடங்கியது. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
வரும் சனிக்கிழமை (ஏப்ரல்2) ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு குவாரண்டினை முடித்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ்.
கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடியபோது சூர்யகுமார் யாதவுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையும் பயிற்சியும் எடுத்துவந்த சூர்யகுமார் யாதவ், காயத்திலிருந்து மீண்டு அண்மையில் மும்பை சென்றடைந்தார். ஆனால் 3 நாட்கள் குவாரண்டின் அவசியம் என்பதால், அதை முடித்துவிட்டு மும்பை அணியுடன் இணைந்துவிட்டார். குவாரண்டினில் இருந்ததால் டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சூர்யகுமார் ஆடவில்லை.
இப்போது குவாரண்டினை முடித்துவிட்டு மும்பை அணியுடன் இணைந்துவிட்டதால், ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் ஆடுவார். 3ம் வரிசையில் இறங்கும் அதிரடி பேட்ஸ்மேனும், மும்பை அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான சூர்யகுமார் யாதவின் இணைவு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் செம மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
