இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 33 வயதிலேயே ரெய்னா ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

2005ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான ரெய்னா, கடைசியாக 2018ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய அணிக்காக ஆடினார். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காத நிலையில், ரெய்னா ஓய்வு அறிவித்தார்.

2019 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நான்காம் வரிசை வீரரை தேடும் படலத்தில், ரெய்னாவுக்கு 2018 இங்கிலாந்து தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த தொடரில் குறை சொல்லும்படியாகவோ அல்லது ரொம்ப மோசமாகவோ எல்லாம் ரெய்னா ஆடவில்லை. ஒரு போட்டியில் 40 ரன்களுக்கு மேல் அடித்தார். மற்றொரு போட்டியில் நாட் அவுட். ஒரேயொரு போட்டியில் மட்டுமே சரியாக ஆடவில்லை. ஆனாலும் அதன்பின்னர் ரெய்னாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. உலக கோப்பைக்கான நான்காம் வரிசை வீரராக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ராயுடுவும் கடைசி நேரத்தில் உலக கோப்பைக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டார்.

ராயுடுவின் புறக்கணிப்பு அவருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராயுடு விரக்தியின் உச்சத்தில் ஓய்வே அறிவித்தார்(பின்னர் வாபஸ் பெற்றார்). இதுவரை ராயுடுவின் புறக்கணிப்பு சர்ச்சை பேசப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், அதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்தில் பேசிய சுரேஷ் ரெய்னா, உலக கோப்பையில் நான்காம் வரிசையில் ராயுடு தான் ஆடியிருக்க வேண்டும். அவர் அதற்காக கடுமையாக உழைத்தார். உலக கோப்பைக்கு முன் ஒன்றரை ஆண்டுகள் இந்திய அணியில் சிறப்பாக ஆடினார். அப்படியிருக்கையில், 2018ல் ராயுடு உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த போது, எனக்கு 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த தொடரை நான் ரசித்து மகிழ்ந்து ஆடவில்லை. ஏனெனில் ராயுடுவின் தோல்வியில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதை நான் ரசிக்கவோ விரும்பவோ இல்லை.

ராயுடுதான் இந்திய அணியின் நான்காம் வரிசை வீரராக ஆடியிருக்க வேண்டும். ஒருவேளை உலக கோப்பையில் அவர் ஆடியிருந்தால், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும். ராயுடுதான் அந்த பேட்டிங் ஆர்டருக்கான சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். 

ரெய்னா சுயநலத்துடன் ஆடாத, பக்கா டீம் பிளேயர் என்பது அனைவரும் அறிந்ததே. போட்டி, பொறாமை குணமெல்லாம் இல்லாத ஜெண்டில்மேன் வீரர் ஆவார். தனது சக வீரர்களின் சாதனைகளை கொண்டாடுபவர் ரெய்னா. இவையனைத்தும் நாம் அறிந்தது. இந்நிலையில், ரெய்னா கூறியிருக்கும் இந்த விஷயம், அவர் மீதான நன்மதிப்பை அதிகரித்துள்ளது.