சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 2ஆவது ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது.
இதே போன்று அடுத்த 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார். அஜிங்க்யா ரஹானே 35 ரன்கள் எடுத்தார். பின்னர், 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி பேட்டிங் செய்தது.
இதில், அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை தீபம் சஹார் வீசினார். அந்த ஓவரில், 2ஆவது பந்திலேயே டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மொயீ அலி தவறவிட்டார். எனினும் அந்த ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை இம்பேக்ட் பிளேயர் முகேஷ் சவுத்ரி வீசினார். அந்த ஓவரை அபிஷேக் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரில் 4, 0, 6, 0, 6, நோபால் + 6, 6, 4 என்று மொத்தமாக 27 ரன்கள் குவித்தார். 3ஆவது ஓவரையும் எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, 6, 4 என்று அடித்த நிலையில் தீபக் சஹார் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 12 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நடிகர் வெங்கடேஷ் ஹைதராபாத் கொடியசைத்து ஆரவாரம் செய்தார். மேலும், ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி என்பதால் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்துடன் இணைந்து இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
