ஆகாஷ் சோப்ரா என்ன தவறை செய்துவிடக்கூடாது என்று கூறினாரோ அந்த தவறை மிகச்சரியாக செய்து அதற்கான பலனையும் அனுபவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி புனேவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 55 ரன்களை விளாசினார். ஜோஸ் பட்லர் (35), தேவ்தத் படிக்கல் (41), ஷிம்ரான் ஹெட்மயர் (32) ஆகிய மூவரும் நல்ல பங்களிப்பு செய்ய 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - RCB vs KKR பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்க்ரம் சிறப்பாக ஆடி 57 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகவில்லை. 8ம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட்டிங் ஆடி 14 பந்தில் 40 ரன்கள் அடித்தார். வில்லியம்சன், பூரன், அபிஷேக் ஷர்மா, திரிபாதி ஆகிய வீரர்கள் படுமோசமாக சொதப்பியதால் 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்து 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் அணி.

டாப் ஆர்டரிலும், முன்வரிசை மிடில் ஆர்டரிலும் ஆடிய வீரர்கள் அனைவருமே சொதப்ப(மார்க்ரமை தவிர மற்றவர்கள்), 8ம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தரால் தான் 149 ரன்களையே எட்டியது சன்ரைசர்ஸ் அணி. 15.4 ஓவரில் 78 ரன்களுக்கே சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் இறங்கிய பின்னர், அடுத்த 3 ஓவரில் 55 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி. எனவே சுந்தரை சற்று மேலே இறக்கிவிட்டிருந்தால் இலக்கை நெருங்கியிருப்பதற்கான வாய்ப்பு கூட இருந்திருக்கும்.

வாஷிங்டன் சுந்தர் அவரது பேட்டிங் திறமையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக காட்டிவருகிறார். ஆஸி., சுற்றுப்பயண டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், கடந்த ஐபிஎல் சீசன் என தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை ஆடி, தன்னால் நன்றாக பேட்டிங்கும் ஆடமுடியும் என்பதை அவர் காட்டியிருந்தார்.

அந்தவகையில், சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்பாக, சுந்தரை ஓபனிங்கே செய்யவைக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியிருந்தார். சுந்தர் நல்ல பேட்ஸ்மேன். அவரை 6,7,8 ஆகிய பின்வரிசைகளில் இறக்கி அவரது திறமையை வீணடித்துவிடக்கூடாது என்று கருத்து கூறியிருந்த நிலையில், அதைத்தான் செய்தது சன்ரைசர்ஸ் அணி. சுந்தரை 8ம் வரிசையில் இறக்கி வீணடித்தது. வாசிம் ஜாஃபரும் சுந்தரை பின்வரிசையில் இறக்கியதை விமர்சித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவரை சற்று மேலே இறக்கிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் சுந்தரை பேட்டிங் ஆர்டரில் மேலே இறக்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.