சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அபாரமாக விளையாடிவருகிறது. குஜராத் அணி ஆடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. 

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் டெவாட்டியா 2 பந்தில் 2 சிக்ஸர் அடித்து குஜராத் டைட்டன்ஸை வெற்றி பெற செய்தார். அதே நம்பிக்கையுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் அணி இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதும் போட்டி இன்று மும்பை டிஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படுமா என்று பார்க்கவேண்டும். சன்ரைசர்ஸ் அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்த அப்துல் சமாத், முதல் 2 போட்டிகளில் சரியாக ஆடாததால் 3வது போட்டியில் அவர் நீக்கப்பட்டார். அதேபோல இன்றைய போட்டியில் இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் நீக்கப்படுவாரா என்று பார்க்க வேண்டும். அவர் 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசினாலும், ஆட்டத்தில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திறமையான இளம் ஃபாஸ்ட் பவுலரான கார்த்திக் தியாகி இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருப்பதால், அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக உம்ரான் மாலிக் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் நீக்கப்படுகிறாரா அல்லது இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். 

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், டி.நடராஜன், உம்ரான் மாலிக்/கார்த்திக் தியாகி.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். 

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நால்கண்டே.