தான் பந்துவீச ரொம்ப கஷ்டப்பட்டது வீரேந்திர சேவாக்கிற்குத்தான் என்று சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.தான் பந்துவீச ரொம்ப கஷ்டப்பட்டது வீரேந்திர சேவாக்கிற்குத்தான் என்று சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான பவுலர் மற்றும் மேட்ச் வின்னர்களில் ஒருவர் சுனில் நரைன். 2012ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதிலிருந்து இப்போது வரை கேகேஆர் அணியில் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சுனில் நரைன், கேகேஆருக்கு பல போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார்.
2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். 2012ல் எப்படி தனது மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை கதறவிட்டாரோ, 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பேட்ஸ்மேன்களை மிரளவிடுகிறார்.
அவருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஸ்பின் பவுலர்கள் ஐபிஎல்லில் அசத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருமே சோடைபோயிருக்கிறார்கள். ஆனால் சுனில் நரைன் இன்றைக்கும் அசத்திவருகிறார். நல்ல ஃபார்மில் அடி வெளுத்து கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் கூட, நரைனின் சுழலில் ரன் அடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
ஐபிஎல்லில் சுனில் நரைன் 141 போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதிரடி பேட்டிங்கிற்கும் பெரிய ஸ்கோர்களுக்கும் பெயர்போன ஐபிஎல்லில் நரைனின் எகானமி வெறும் 6.67 ஆகும். இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நரைனின் எகானமி வெறும் 5 ஆகும்.
இப்படியாக ஐபிஎல்லில் காலங்காலமாக சிறப்பாக ஆடிவரும் சுனில் நரைனின் பவுலிங் எத்தனையோ பெரிய பேட்ஸ்மேன்களுக்கு ஸ்கோர் செய்ய/எதிர்கொள்ள கஷ்டமாக இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கு பந்துவீச கடினமாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்று நரைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சுனில் நரைன், வீரேந்திர சேவாக்கிற்கு பந்துவீசுவதுதான் எனக்கு எப்போது கடினமாக இருந்திருக்கிறது. ஆட்டத்தின் சூழல், அணியின் நிலை என எதையுமே கருத்தில்கொள்ளாமல் அவரது இயல்பான பேட்டிங்கை, அவர் எப்படி ஆட நினைக்கிறாரோ அந்த மாதிரி ஆடும் வீரர் சேவாக் தான். அதனால் தான் அவருக்கு பந்துவீசுவது கடினம் என்றார் நரைன்.
