இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான மூன்றுவிதமான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால் அதை மனதில்வைத்து அதற்கு தயாராகும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த சுனில் நரைன்  மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சுனில் நரைன் மற்றும் பொல்லார்டு ஆகிய இருவருமே ஐபிஎல் உட்பட உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் அபாரமாக ஆடிவருகின்றனர். அவர்கள் டி20 அணியில் வலுசேர்ப்பார்கள் என்பதால் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடது கை ஆஃப் ஸ்பின்னர் பியெரேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலும் அணியில் உள்ளார். 

ஆண்ட்ரே ரசல் ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். ஐபிஎல் சீசன் முழுவதுமே தனது அதிரடியால் எதிரணிகளை தெறிக்கவிட்டதோடு மரண பயத்தை காட்டினார். ஆனால் அவர் ஐபிஎல்லிலும் சரி, உலக கோப்பையிலும் சரி மணிக்கட்டு வலியால் கடுமையாக துடித்தார். எனினும் அவரும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். 

கார்லஸ் பிராத்வெயிட்டின் தலைமையிலான முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்ப்போம். 

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜான் காம்ப்பெல், லெவிஸ், ஹெட்மயர், பூரான், பொல்லார்டு, ரோவ்மன் பவல், பிராத்வெயிட்(கேப்டன்), கீமோ பால், சுனில் நரைன், கோட்ரெல், ஒஷேன் தாமஸ், ப்ராம்பிள், ஆண்ட்ரே ரசல், பியெரே.