ரிஷப் பண்ட் செய்த தவறுகளிலிருந்து கொஞ்சம்கூட பாடமே கற்காமல், செய்த தவறுகளையே திரும்ப திரும்ப செய்வதாக கவாஸ்கர் விளாசியுள்ளர். 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடித்தவர் ரிஷப் பண்ட். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், தோனியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும், ரசிகர்களின் அபிப்ராயத்தையும் பெற்றார்.

ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஐபிஎல்லில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், கேப்டன்சியிலும் சுமாராகவே செயல்படுகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 4வது டி20 போட்டியில் 23 பந்தில் வெறும் 17 ரன் மட்டுமே அடித்தார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம் இந்திய அணியில் அவரது இடத்தை கேள்விக்குறியாக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் ரிஷப் பண்ட் ஒரேமாதிரி அவுட்டாகிவருவது கடும் அதிருப்தியளிக்கிறது. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்படும் பந்தை விரட்டிச்சென்று பெரிய ஷாட் ஆடமுயன்று கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார் ரிஷப் பண்ட். அதை அவர் தொடர்ச்சியாக செய்கிறார் என்பதை அறிந்து, தென்னாப்பிரிக்க அணி ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசியே அவரை 3 முறை வீழ்த்தியிருக்கிறது. ஆனாலும் ரிஷப் பண்ட் திருந்தாமல் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்கிறார். அதனால் கடும் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை கடுமையாக விளாசியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கவாஸ்கர், ரிஷப் பண்ட் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே இல்லை. கடந்த 3 முறை அவர் அவுட்டான விதத்திலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக பந்தை வீசுகின்றனர். ரிஷப் விரட்டிச்சென்று அடித்து விக்கெட்டை இழக்கிறார். வைடாக வீசப்படும் பந்துகளை அடிப்பதை ரிஷப் தவிர்க்க வேண்டும். டெம்பா பவுமாவும் தென்னாப்பிரிக்க பவுலர்களும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீசி ரிஷப்பை வீழ்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அந்த திட்டத்தை தெளிவாக செயல்படுத்தவும் செய்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துக்கு 10 முறை ஆட்டமிழந்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பந்துகள், ரிஷப் ஆடவில்லை என்றால் வைடாக இருந்திருக்கும். அந்த பந்தை அடிக்குமளவிற்கு அவரிடம் பவரும் இல்லை. ஒரே தொடரில் பலமுறை ஒரே மாதிரி அவுட்டாவது என்பது நல்லதல்ல என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.