Asianet News TamilAsianet News Tamil

டி.ஆர்.எஸ் எடுக்கணுமா வேண்டாமானு விக்கெட் கீப்பர் தான் முடிவு செய்யணும்; கேப்டன் இல்ல..! கவாஸ்கர் கடும் தாக்கு

டி.ஆர்.எஸ் எடுப்பது குறித்த முடிவை விக்கெட் கீப்பர் தான் எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar opines wicket keeper should decide on drs not captain
Author
London, First Published Aug 15, 2021, 3:42 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் அடித்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் ஆலோசனையை கொஞ்சம் கூட மதிக்காமல், டி.ஆர்.எஸ் எடுத்த சம்பவம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி இருந்தவரை, டி.ஆர்.எஸ் விவகாரத்தில் அவர் எடுப்பதுதான் முடிவு. அவருக்கு பின் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பொறுப்பேற்ற பிறகு, அவரது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் டி.ஆர்.எஸ் எடுப்பதில் சற்று தடுமாறினாலும், 2 ஆண்டுகள் அனுபவத்தை பெற்றுள்ள ரிஷப் பண்ட், இப்போதெல்லாம் ரிவியூ எடுப்பதில் பெரும்பாலும் சரியான முடிவு எடுக்கிறார்.

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சிராஜ் வீசிய 21வது ஓவரின் கடைசி பந்து ரூட்டின் கால்காப்பில் பட்டது. அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, அதற்கு ரிவியூ எடுக்குமாறு கேப்டன் கோலியிடம் வலியுறுத்தினார் சிராஜ். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ஆமோதிக்க, ரிவியூ செய்தார் கேப்டன் கோலி. ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றது. இதையடுத்து ஒரு இன்னிங்ஸுக்கான 3 ரிவியூக்களில் ஒன்றை இழந்தது இந்திய அணி.

சிராஜின் அடுத்த ஓவரிலேயே மீண்டும் பந்து ரூட்டின் கால்காப்பில் பட, சிராஜ் மீண்டும் ரிவியூ எடுக்க சொன்னார். ஆனால் இம்முறை பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றுவிடும் என்பதை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கேப்டன் கோலியிடம் ரிவியூ எடுக்க வேண்டாம் என்றார். ஆனால் கோலியோ ரூட்டின் விக்கெட் எப்படியாவது கிடைத்துவிடாதா என்ற ஆர்வத்தில் ரிவியூ எடுக்கும் முனைப்பில் இருந்தார். கோலியின் எண்ணத்தை அறிந்த ரிஷப், உறுதியாக எடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் ரிஷப் பேச்சை கேட்காத கோலி ரிவியூ எடுத்தார். அவர் ரிவியூ எடுக்கப்போகும்போது கூட, கையை தட்டிவிட முயன்றார் ரிஷப். ஆனால் இறுதியில் கோலி அந்த ரிவியூவை எடுத்தார். பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போனதால் 2வது ரிவியூவையும் இழந்தது இந்திய அணி.

இந்த விவகாரத்தில் கேப்டன் விராட் கோலியின் செயலை விமர்சித்தார் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், டி.ஆர்.எஸ் எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை விக்கெட் கீப்பர் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் பவுலர் எப்போதுமே அவுட் என்றுதான் நினைப்பார். அதேவேளையில், எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தால், பேட்ஸ்மேன் அது அவுட் இல்லை என்றுதான் நினைப்பார். இந்தியா முதல் ரிவியூ எடுத்தது கூட பரவாயில்லை. ஆனால் ரிஷப் பண்ட் எவ்வளவோ வேண்டாம் என்று கூறியும், கோலி 2வது ரிவியூவை எடுத்தார் என்று கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios