எளிதாக கிடைக்கும் அதிகமான பணம், இளம் வீரர்களை வளரவிடாமல் தடுத்துவிடும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கவுள்ளது.

இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி செலவு செய்யலாம். ஆனால் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக 8 பழைய அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால், அந்த அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கு ஒதுக்கிய தொகை போக, மீதத்தொகை அணிகளின் கையிருப்பில் இருக்கும். அதேபோல 2 புதிய அணிகளும், அவை ஏலத்திற்கு முன் எடுத்த 3 வீரர்களுக்கு அந்த ரூ.90 கோடியில் ஒதுக்கிய தொகை போக மீதத்தொகை அந்த அணிகளின் கையிருப்பில் இருக்கும்.

இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட ஆகிய பெரிய வீரர்கள் மற்றும் அண்டர் 19 உலக கோப்பையை வென்று அசத்திய இந்திய அண்டர் 19 வீரர்கள் உட்பட ஏகப்பட்ட இளம் வீரர்கள் என அனுபவமும் இளமையும் கலந்த அனைத்துவிதமான வீரர்களும் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் 590 வீரர்களில் 355 பேர் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடிராத வீரர்கள். 

அதிலும் குறிப்பாக அண்மையில் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்தியா அண்டர் 19 வீரர்கள் சிலர் பெரும் தொகைக்கு விலைபோவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இளம் வீரர்களுக்கு கோடிகளை கொட்டிக்கொடுப்பது தவறு என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அண்டர் 19 வீரர்கள் சிலர் பெரிய தொகைக்கு விலைபோவார்கள். அண்டர் 19 லெவலில் நன்றாக ஆடிய வீரர்கள், ஐபிஎல்லிலோ அல்லது சர்வதேச அளவிலோ அதேமாதிரி நன்றாக ஆடுவார்கள் என்று எந்த கியாரண்டியும் கொடுக்க முடியாது. 

சர்வதேச அளவில் ஆடாத வீரர்களுக்கு ஐபிஎல்லின் அதிகபட்ச ஊதியம் ரூ.1 கோடி என நிர்ணயிக்கலாம். கடினமாக உழைத்து திறமையை வளர்த்தால்தான், அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை இளம் வீரர்களுக்கு ஊட்டவேண்டும். எளிதாக கிடைக்கும் அதிகமான பணம், இளம் வீரர்களை அவர்களது திறமையை வளர்த்துக்கொள்ள விடாமல் கெடுத்துவிடும். ஒரு அளவாக பணம் கொடுத்தால்தான், அது அவர்களது வளர்ச்சிக்கு உதவும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.