IND vs AUS: அகமதாபாத் பிட்ச் இப்படித்தான் இருக்கணும்.. இல்லைனா ஆப்புதான்..! கவாஸ்கர் அதிரடி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் அகமதாபாத் ஆடுகளம் எப்படி இருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியும் பெற்றதால் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதற்கான முன் தயாரிப்புகளுடன் வந்த ஆஸ்திரேலிய அணி, முதலிரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் சுதாரித்துக்கொண்ட ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை வீழ்த்தியது.
ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் தான் இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்பட்ட நிலையில், 3வது டெஸ்ட்டில் அதுவே இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. அந்த போட்டி வெறும் 2 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. அந்த ஆடுகளத்தை ஆய்வு செய்த ஐசிசி, அது படுமோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 2 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.
4வது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ள நிலையில், அந்த ஆடுகளம் எப்படி அமைய வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும். 3வது டெஸ்ட்டில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றுவிட்டது. அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே இந்தியாவிற்கு வாழ்வா சாவா என்ற முக்கியமான அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்வது சில சமயம் நமக்கே பாதிப்பாக அமையும். 2012-13ல் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்தபோது, கிரேம் ஸ்வான் மற்றும் மாண்டி பனேசர் ஆகிய இருவரும் ஸ்பின்னில் அசத்தி இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்த உதவினர். அதுமாதிரிதான் இந்தூர் டெஸ்ட்டிலும் நடந்தது. எனவே பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சம அளவில் ஒத்துழைப்பு தரக்கூடிய நல்ல பேலன்ஸான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். முதல் 2 நாட்களில் புதிய பந்தில் பந்துவீசும் பவுலர்களுக்கும், அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் பந்து வரும் லைனில் பேட்டிங் ஆடுவதற்கும் பிட்ச்சில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கடைசி 2 நாட்களில் பந்து திரும்ப வேண்டும். அகமதாபாத் பிட்ச் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் கவாஸ்கர்.