இலங்கைக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது சாரா டெண்டுல்கர் உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால், 2ஆவது பந்திலேயே கிளீன் போல்டானார்.
ரிஸ்க் எடுக்காத சுப்மன் கில் - சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 92 ரன்களில் அவுட்!
அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார். கோலி மற்றும் கில் இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி வந்தனர். இந்திய அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார்.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 44 இன்னிங்ஸ்களில் 21 முறை அரைசதம் அடித்துள்ளார். விராட் கோலி 33 இன்னிங்ஸ்களில் 13ஆவது முறையாக உலகக் கோப்பையில் அரைசதம் அடித்துள்ளார். இந்த ஆண்டில் 10ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா 24 இன்னிங்ஸ்களில் 12 முறை அரைசதம் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இது உலகக் கோப்பையில் 2ஆவது அரைசதம் ஆகும்.
சொந்த மண்ணில் ஜாம்பவான் முன்னாடி சொற்ப ரன்களில் வெளியேறிய ரோகித் சர்மா!
மேலும், இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில் 12ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். பதும் நிசாங்கா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் 11 முறை அரைசதம் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 10 முறை அரைசதம் அடித்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் இந்த உலகக் கோப்பையில் முதல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 92 ரன்களில் ஸ்லோயர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். கில் 92 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய போது சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் எழுந்து நின்று கை தட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
