மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச்சிலையை மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திறந்து வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 15,921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.
தற்போது இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது முழு உருவச் சிலையை மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவ மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வந்தது. மேலும், சச்சினின் முழு உருவச் சிலையும் செய்யப்பட்டது.
New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பணிகள் முடிந்து சச்சினின் முழு உருவச் சிலையானது மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவப்பட்டது. அதுவும் சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகிலேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சச்சின் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த சிலை அவரது 50 ஆண்டுகால வாழ்வை சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி இந்த மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!
இந்நிகழ்ச்சியில் மகாராஷிடிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, என்சிபி தலைவரும் முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவருமான சரத் பவார், மும்பை கிரிக்கெட் சங்கம் தலைவர் அமோல் காலே ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கரின் இந்த சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
