இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட், ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்ததால் முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை குவித்தது. ஓலி போப் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார். டெயிலெண்டரான ஸ்டூவர்ட் பிராட், அதிரடியாக ஆடி 45 பந்தில் 62 ரன்களை குவித்து மிரட்டினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக அவுட்டாகினர். தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட்டை ஒரு ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்த, 32 ரன்களில் ஜான் கேம்ப்பெல்லை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். 

அதன்பின்னர் ஷேய் ஹோப்பை 17 ரன்களிலும் ப்ரூக்ஸை 4 ரன்களிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்த, ரோஸ்டான் சேஸை 9 ரன்களில் பிராட் வீழ்த்தினார். பிளாக்வுட்டும் கேப்டன் ஹோல்டரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் பிளாக்வுட்டை 46 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. ஹோல்டரும் டௌரிச்சும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் ஒருசில ஓவர்கள் சிறப்பாக ஆடி களத்தில் நிலைக்க முயன்றனர். ஆனால் அனுபவ பவுலர் ஸ்டூவர்ட் பிராட் அதற்கு அனுமதிக்கவில்லை. ஹோல்டரை 46 ரன்களில் வீழ்த்திய பிராட், அதன்பின்னர் டௌரிச், கார்ன்வால், கீமார் ரோச் ஆகியோரையும் வீழ்த்தினார். அதனால் 197 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸிலேயே 172 ரன்கள் முன்னிலை பெற்றதால், இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை அடித்து, மெகா இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு இங்கிலாந்து நிர்ணயம் செய்யும். 2வது இன்னிங்ஸில் அவசரப்பட்டு வேகமாக ஸ்கோர் செய்ய வேண்டிய அவசியமும் இங்கிலாந்துக்கு இல்லை. ஏனெனில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே 2வது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டதால், 2வது இன்னிங்ஸில் தேவையான ஸ்கோரை அடிக்க இங்கிலாந்துக்கு போதிய கால அவகாசம் உள்ளது. எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.