ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான், ஸ்மித் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஸ்மித்தை சமாளிப்பதற்காகவே ஆர்ச்சரை இறக்கியது இங்கிலாந்து அணி. 

லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியிலும் ஸ்மித் சிறப்பாக ஆடினார். ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து அணியில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர், ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பதிலாக ஸ்மித்தையே வீழ்த்தினார். ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்தது. அதனால் பெவிலியன் திரும்பிய ஸ்மித், மீண்டும் களத்திற்கு வந்து சிறிது நேரம் ஆடினார். ஆனால் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிவாங்கிய ஸ்மித்திற்கு தலைவலி, கழுத்து வலி இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லபுஷேன் ஆடினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் ஆடவில்லை. அந்த போட்டியிலும் லபுஷேன் தான் ஆடினார். நான்காவது போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. நான்காவது போட்டிக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் ஆர்ச்சருக்கு இடையே வார்த்தப்போர் நடந்தது. 

காயத்திலிருந்து குணமடைந்து நான்காவது போட்டிக்கு தயாராகிவந்த ஸ்மித், அப்போது பேசியபோது, ஆர்ச்சரால் என்னை அவுட்டாக்க முடியவில்லை. அவர் எனது பின்னங்கழுத்தில் அடித்தாரே தவிர, எனது விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஆர்ச்சரை தவிர மற்ற பவுலர்கள் என்னை அவுட்டாக்கினர். அவர்கள் கூட என் மீது ஆதிக்கம் செலுத்தி பந்துவீசினர். ஆனால் ஆர்ச்சரால் என்னை அவுட்டாக்க முடியவில்லை என்று ஸ்மித் தெரிவித்திருந்தார்.

ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்த ஆர்ச்சர், கரெக்ட்... நான் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஆனால் ஸ்மித் களத்திலே இல்லாதபோது என்னால் எப்படி அவுட்டாக்க முடியும்? அவர் காயத்தால் வெளியேறிவிட்டு திரும்பிவந்த பின்னர், நான் பவுலிங் போடுவதற்கு முன்னதாகவே, அவர் அவுட்டாகிவிட்டார் என்று தெரிவித்திருந்தார். அதாவது, அவர் பந்துவீசும்போது ஸ்மித் களத்தில் இருந்திருந்தால், அவரை வீழ்த்தியிருப்பேன் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார் ஆர்ச்சர்.

இருவருக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்ததால், நான்காவது போட்டியில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு ஆர்ச்சர்லாம் ஒரு ஆளே இல்லை என்கிற ரீதியில் பேசியிருந்த ஸ்மித், அதை நிரூபித்தும் காட்டினார். ஆர்ச்சரால் ஸ்மித்தை ஒன்றுமே செய்யமுடியவில்லை. இன்னிங்ஸ் முழுக்க இங்கிலாந்து பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார் ஸ்மித். 

ஸ்மித் களத்தில் இருந்திருந்தால் வீழ்த்தியிருப்பேன் என்று வீராப்பாக பேசிய ஆர்ச்சரால், அவரை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆர்ச்சர், ப்ராட், ஜாக் லீச், ஓவர்டன் என அனைத்து இங்கிலாந்து பவுலர்களையும் அலறவிட்டார் ஸ்மித். ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த ஆர்ச்சர் எவ்வளவோ போராடியும் அவரது பருப்பு ஸ்மித்திடம் வேகவில்லை. ஆர்ச்சரின் அனைத்து முயற்சிகளும் வீணாகின. அபாரமாக ஆடிய ஸ்மித், இரட்டை சதமடித்து நான் தான் கெத்து என நிரூபித்தார். 

ஸ்மித் - ஆர்ச்சர் இடையேயான போட்டியில் ஸ்மித் வென்றுவிட்டார். ஸ்மித்தை வீழ்த்த முடியாததுகூட போகட்டும். ஆனால் ஆர்ச்சரால் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட போடமுடியாதது அதைவிட பெரிய கொடுமை.