சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர்.இவர்கள் நால்வரில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். நால்வருமே சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் கோலி தான் அவர்களில் சிறந்தவர் என்பது பல முன்னாள் வீரர்களின் கருத்து. அதற்கு காரணம், அவரது கன்சிஸ்டென்ஸி(நிலையான ஆட்டம்) மற்றும் சாதனைகள் ஆகியவைதான்.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நம்பர் 1 ஆக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித் தான் கோலோச்சுகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஸ்மித், அசாத்தியாமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 

பேட்டிங் டெக்னிக், நிலையான ஆட்டம், ரெக்கார்டு ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலியும் ஸ்மித்தும் தான் டாப். வில்லியம்சன், ரூட்டை விட கோலியும் ஸ்மித்தும் மேலே இருக்கிறார்கள். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தே ஆதிக்கம் செலுத்துகிறார். 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த நால்வரில் இருவரான ஸ்மித்தும் ரூட்டும் ஆஷஸில் ஆடிவருகின்றனர். இவர்களில் ஸ்மித் அசத்தலாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்க, ரூட் திணறிவருகிறார். ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஸ்மித் தான். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற முதல் மற்றும் நான்கு ஆகிய இரண்டு போட்டிகளிலும் ஸ்மித் தான் ஆட்டநாயகன். 

இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாகவும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் ஸ்மித் திகழ்கிறார். ஸ்மித் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப்பக்கம் ரூட் பயங்கரமாக சொதப்புவதுதான் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் எப்படியோ, அப்படித்தான் இங்கிலாந்துக்கு ரூட். அப்படியிருக்கையில், அவர் சிறப்பாக ஆடி முன்னின்று அணியை வழிநடத்தி செல்ல வேண்டும். அணியின் பெஸ்ட் பேட்ஸ்மேனே எளிதாக விக்கெட்டை இழக்கும்போது, அது அணியின் மற்ற வீரர்களுக்கு ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். 

அதுதான் ஆஷஸில் நடந்துகொண்டிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பியுள்ள ஸ்மித், வேற லெவலில் பேட்டிங் ஆடிவருகிறது. இதுவரை முடிந்துள்ள 4 ஆஷஸ் போட்டிகளில், மொத்தமாக 5 இன்னிங்ஸ்களில் தான் ஸ்மித் பேட்டிங் ஆடியுள்ளார். ஆனால் வெறும் 5 இன்னிங்ஸ்களில் அவர் குவித்துள்ள ரன்கள் 971. இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும், 92, 82 இவைதான் அந்த 5 இன்னிங்ஸ்களில் ஸ்மித் குவித்துள்ள ரன்கள். 

ஸ்மித் இப்படி அசத்திவரும் நிலையில், ரூட் மொத்தமாக 8 இன்னிங்ஸ்களில் 3 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அரைசதம் அடித்ததற்கு நிகராக டக் அவுட்டாகி சொதப்பினார் ரூட். 

ஸ்மித் ஜொலிப்பதற்கும் ரூட் சொதப்புவதற்கும் அவர்களது பேட்டிங் டெக்னிக் முக்கியமான காரணம். ஸ்மித் எப்படி பந்து போட்டாலும் சிறப்பாக பேட்டிங் ஆடுகிறார். ஸ்மித்தை அவுட்டாக்குவதற்கு வழியே இல்லை என்கிற அளவுக்கு அவரது பேட்டிங் அபாரமாக பேட்டிங் இருக்கிறது. ஸ்மித்திற்கு ஸ்டம்புக்கு நேராக பந்துபோட்டால், நாள் முழுதும் போட்டாலும் அவுட்டாக்க முடியாது. அதில் அவர் ரொம்ப ஸ்ட்ராங். அதேநேரத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி, அவரை வீழ்த்த பவுலர்கள் முயன்றாலும், அதற்கும் ஸ்மித் இடம் கொடுப்பதில்லை. தனது வீக்னெஸை பவுலர்கள் பயன்படுத்த முயல்வதை தெரிந்துகொண்டு கவனமாக ஆடிவிடுகிறார் ஸ்மித். 

பவுலர்களின் முக்கியமான பவுலிங் ஆயுதமே, ஸ்டம்புக்கு நேராக வீசி போல்டோ அல்லது எல்பிடபிள்யூவோ செய்வதுதான். ஆனால் எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் வீசினாலும் ஸ்மித், நேராக வீசப்படும் பந்தில் அவுட்டாவதில்லை. ஆனால் ரூட் அதில்தான் அவுட்டே ஆகிறார். நான்காவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்டம்புக்கு நேராக நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் தான் ஆட்டமிழந்தார். 

முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் அடித்த ரூட்டை, ஸ்டம்புக்கு நேராக வீசி எல்பிடபிள்யூ செய்தார் ஹேசில்வுட். ரூட் ஸ்டம்புக்கு நேராக வீசப்படும் பந்தில் வீக்காக இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் அதை மிகச்சரியாக எக்ஸிகியூட் செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ரூட் களத்திற்கு வந்த முதல் பந்தையே ஸ்டம்புக்கு நேராக அபாரமாக வீசினார் பாட் கம்மின்ஸ். அதற்கு பலனும் கிடைத்தது. முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார் ரூட். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரூட் அவுட்டான வீடியோக்கள் இதோ.. 

முதல் இன்னிங்ஸில் அவுட்டான வீடியோ:

இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டான வீடியோ:

ஸ்டம்புக்கு நேராக வீசினால் ஸ்மித்தை வீழ்த்தவே முடியாது.. ஸ்டம்புக்கு நேராக போட்டாலே ரூட்டை வீழ்த்திவிடலாம். ஒரு திறமையான பேட்ஸ்மேனுக்கு அடையாளம் என்னவென்றால், தனது வீக்னெஸை வெளியே காட்டாமல் சமாளித்து ஆடுவதுதான். ஆனால் ரூட் தனது வீக்னெஸை அப்பட்டமாக காட்டிவிட்டார்.