சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

இருவருக்கும் இடையே திறமையின் அடிப்படையில் போட்டி இருந்தாலும், இருவருமே அதை தனிப்பட்ட போட்டியாக எடுத்துக்கொள்வதில்லை. இதை பறைசாற்றும் வகையில், ஸ்மித்தின் சமீபத்திய கருத்து அமைந்துள்ளது. 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்மித், கோலி குறித்தும் பேசினார். அப்போது கோலியிடம் தான் பார்த்து வியக்கும் விஷயம் என்னவென்று தெரிவித்தார். 

கோலி குறித்து பேசிய ஸ்மித், விராட் கோலியை பார்த்தாலே எனக்கு வியப்பாக இருக்கும். அவர் அருமையான வீரர். அவரது சாதனைகளே அதற்கு சான்று. இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு கோலி தான் காரணம். ஆட்டத்தின் மீதான அவரது ஈடுபாடும், ஆர்வமிகுதியும் தான் இந்திய அணியை சிறந்த அணியாக திகழவைக்கிறது.

திறமையை வளர்த்துக்கொள்வதில் கோலிக்கு இருக்கும் ஆர்வம் அபரிமிதமானது. அவரது உடல்வாகு மேம்பட்ட விதமும் வியப்பானது. கடும் பயிற்சி மற்றும் உழைப்பின் மூலம் தற்போது மிகவும் ஃபிட்டாகவும் வலுவாகவும் திகழ்கிறார். 

நான் கோலியிடம் பார்த்து வியக்கும் மிக முக்கியமான மற்றொரு விஷயம், இலக்கை விரட்டும் விதம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இலக்கை விரட்டும் விதம் அபாரமானது. ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியதில், அவரது பேட்டிங் சராசரி அசாதாரணமானது என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.