சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் பழைய பேட்டிங் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து புதிய மைல்கற்களை எட்டிவரும் நிலையில், அதே வேலையை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்துவருகிறார் ஸ்மித். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் சதங்களையும் ரன்களையும் குவித்துவரும் ஸ்மித், இடைவிடாமல் தொடர்ச்சியாக அதை செய்துவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஸ்மித், அந்த இடத்திற்கு தொடர்ந்து நியாயம் செய்துவருகிறார். 

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி ரன்களையும் சாதனைகளையும் வாரிக்குவித்த ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட்டில், இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை ஸ்மித் 34 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். 

இந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்தபோதே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார் ஸ்மித். 126வது டெஸ்ட் இன்னிங்ஸில் ஸ்மித் 7000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 7000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் வேலி ஹாமண்ட் 131 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இந்த பட்டியலில் 134 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்த சேவாக் மூன்றாமிடத்திலும், சச்சின் டெண்டுல்கர்(136 இன்னிங்ஸ்) நான்காமிடத்திலும் உள்ளனர். 138 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்த சங்கக்கரா, கேரி சோபர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் மூன்றாமிடத்தில் உள்ளனர். 

இந்த போட்டியில், இரண்டாம் நாள் டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை குவித்துள்ளது. வார்னர் 261 ரன்களுடனும் ஸ்மித் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.