ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்திடம் மரண அடி வாங்கியுள்ளார் விராட் கோலி. 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகிறார்கள். விராட் கோலி தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தரவரிசைகளிலும் முதலிடத்தில் இருந்துவந்தார். 

ஸ்மித் தடை முடிந்து ஆஷஸ் தொடரில் ஆடிவருகிறார். தடை முடிந்து மீண்டும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அசத்தலாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு உதவினார். இரண்டாவது போட்டியிலும் நன்றாக ஆடினார். ஆனால் ஆர்ச்சரின் பந்தில் அடிபட்டதால் மூன்றாவது போட்டியில் ஆடவில்லை. 

ஸ்மித் அபாரமாக ஆடிவரும் அதேவேளையில், விராட் கோலி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங் ஆடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 அரைசதங்கள் மட்டுமே அடித்தார். அதுமட்டுமல்லாமல், இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். 

ஸ்மித் அபாரமாக ஆடிவரும் அதேவேளையில் கோலி சொதப்பியதால், கோலியை பின்னுக்குத்தள்ளி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டார் ஸ்மித். 904 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் புஜாரா 825 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளனர்.