கான்பெராவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது. 151 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் 19வது ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஸ்மித் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மற்ற பேட்ஸ்மேன்களை போல வழக்கமான பேட்டிங் ஸ்டைலையோ டெக்னிக்கையோ கொண்டவர் அல்ல. வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலையும் டெக்னிக்கையும் கொண்டவர் ஸ்மித். அவரது பேட்டிங் ஸ்டைல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

ஆனால் கோழி குருடாக இருந்தால் என்ன? குழம்பு ருசியாக இருக்குதாங்குறதுதான் முக்கியம் என்ற பழமொழி ஸ்மித்துக்குத்தான் பொருந்தும். ஸ்மித் மோசமாக ஆடி ஸ்கோர் செய்கிறார் என்று ஜாண்டி ரோட்ஸ் கூட விமர்சித்திருந்தார். ஆனால் எப்படி ஆடினால் என்ன..? ஸ்கோர் செய்கிறார் அல்லவா.. அவரை பவுலர்களால் தடுக்க முடியவில்லை என்பதுதானே உண்மை. 

ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய சில ஷாட்டுகள் அவரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. அவர் ஆடிய ஷாட்டுகளை கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது சக வீரர்களும் எதிரணி வீரர்களுமே மிரண்டு போயுள்ளனர். 

அப்பர் கட், அபாரமான சில கவர் டிரைவ்கள், ஃப்ளிக், புல் ஷாட் என மிரட்டினார் ஸ்மித். மிட் ஆஃப் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் ஃபீல்டர்களுக்கு இடையே இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அபாரமான ஷாட்டுகள் அவை. ஃபுல் லெந்த்தில் ஸ்டம்புக்கு நேராக வீசப்பட்ட பந்தை, மிட் ஆஃபுக்கும் எக்ஸ்ட்ரா கவர் ஃபீல்டருக்கும் இடையில் அடித்தார். அதெல்லாம் அசாத்தியமான ஷாட். மேலும் கவர் திசையில் ஒரு ஷாட் அடித்தார். அதுவும் மிரட்டலான ஷாட். ஸ்மித் ஆடிய ஷாட்டுகளின் வீடியோ இதோ.. 

பென்ச்சில் உட்கார்ந்து ஸ்மித்தின் இன்னிங்ஸை பார்க்கும்போது, வீரர்கள் சிலர், இவரால்(ஸ்மித்) எப்படி இந்த ஷாட்டுகளை ஆடமுடிகிறது என்று தன்னிடம் கேட்டதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.