ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடிவரும் ஸ்மித்திற்கு, இந்த இன்னிங்ஸிலும் சதமடிக்க இன்னும் 2 ரன்களே தேவை. எனவே அவரது சதம் உறுதியாகிவிட்டது. அவர் 2 ரன்களை அடிப்பதற்குள்ளாக நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வந்துவிட்டது. இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால் கூட உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஸ்மித் சதம் அடித்திருப்பார். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் பொறுப்பான சதத்தால் 284 ரன்கள் அடித்தது. அதில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து வெறும் 140 ரன்கள் மட்டுமே அடித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 374 ரன்களை குவித்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் பான்கிராஃப்ட்டும் இந்த முறையும் சொதப்பினர். வார்னர் 8 ரன்களிலும் பான்கிராஃப்ட் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த உஸ்மான் கவாஜா 40 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், முதல் இன்னிங்ஸை போலவே ஸ்மித்துடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க உதவினார். ஸ்மித்தும் ஹெட்டும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஸ்மித் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஹெட்டும் அரைசதம் அடித்தார். 

அரைசதத்திற்கு பிறகும் ஸ்மித் அபாரமாக ஆடினார். ஆனால் ஹெட், அரைசதம் அடித்த மாத்திரத்தில் 51 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித் - ஹெட் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை பிரித்து ஸ்டோக்ஸ் தான் பிரேக் கொடுத்தார். இங்கிலாந்து அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் தனது பங்களிப்பை சிறப்பான முறையில் அளித்துவருகிறார் ஸ்டோக்ஸ். 

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டுக்கு பிறகு, ஸ்மித்துடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஸ்மித், சதமடிப்பதற்குள்ளாக நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வந்துவிட்டது. ஸ்மித் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் நல்ல ஃபார்மில் தெளிவாக ஆடிக்கொண்டிருப்பதால் அவர் சதமடிப்பது உறுதியாகிவிட்டது. 

ஸ்மித் இன்னும் 2 ரன்கள் அடித்தால் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன் ராகுல் டிராவிட்டும் ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார்.