பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 59 ரன்கள் அடித்த ஸ்டீவ் ஸ்மித், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களான சச்சின் டெண்டுல்கர், சங்கக்கரா, சேவாக், ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனைகளை தகர்த்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடினாலும், டெஸ்ட்டில் சற்று கூடுதல் சிறப்பாக ஆடி சாதனைகளை படைத்துவருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக ஆடிய ஸ்மித், லாகூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக ஆடினார். 3வது டெஸ்ட்டில் 59 ரன்கள் அடித்தார் ஸ்மித். 3வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து ஸ்மித் ஆடிய பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமான இன்னிங்ஸ். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.

3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் ஸ்மித்தின் 150வது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். 150 டெஸ்ட் இன்னிங்ஸ்களின் முடிவில் 7993 ரன்களை குவித்துள்ள ஸ்மித், 150 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை ஜாம்பவான் கிரிக்கெட்டரான குமார் சங்கக்கரா (7913) தான் முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத்தள்ளி ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (7869), 4ம் இடத்தில் சேவாக் (7964), 5ம் இடத்தில் ராகுல் டிராவிட் (7680) ஆகியோர் உள்ளனர்.