சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் அறியப்படுகின்றனர். 

இவர்கள் நால்வரில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். நால்வருமே சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் கோலி தான் அவர்களில் சிறந்தவர் என்பது பல முன்னாள் வீரர்களின் கருத்து. அதற்கு காரணம், அவரது கன்சிஸ்டென்ஸி(நிலையான ஆட்டம்) மற்றும் சாதனைகள் ஆகியவைதான். 

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நம்பர் 1 ஆக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித் தான் கோலோச்சுகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஸ்மித், அசாத்தியாமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 

முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்சரில் பின்கழுத்தில் அடிபட்டதால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆடவில்லை. மீண்டும் நான்காவது போட்டியில் ஆடிவரும் ஸ்மித், முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். 

அவரது அபாரமான இன்னிங்ஸால் ஆஸ்திரேலிய அணி, நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவித்தது. இந்த இரட்டை சதத்தின் மூலம் பல சாதனைகளை குவித்துள்ளார் ஸ்மித். 

சாதனைகளின் பட்டியல்:

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் 24, 25 சதங்களை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்த ஸ்மித், 26வது சதத்தையும் விரைவில் அடித்த வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 

2. 100 டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியதற்கு பிறகு ஒரு பேட்ஸ்மேன் எட்டிய உச்சபட்ச பேட்டிங் ஆவரேஜ் 64.64. இதை எட்டியிருப்பது ஸ்மித். ஸ்மித்திற்கு அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ்(61.72 சராசரி), வாலி ஹாமண்ட்(61.71 சராசரி-இங்கிலாந்து வீரர்) ஆகியோர் உள்ளனர். இந்த 6 மற்றும் 7வது இடங்களில் முறையே ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளனர். விராட் கோலி லிஸ்ட்லயே இல்லை. 

3. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன்(19 சதங்கள் vs இங்கிலாந்து), கவாஸ்கர்(13 சதங்கள் vs வெஸ்ட் இண்டீஸ்), ஹோப்ஸ்(12 சதங்கள் vs ஆஸ்திரேலியா), ஆகியோருக்கு அடுத்த இடத்தை சச்சின் டெண்டுல்கருடன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். ஸ்மித் இங்கிலாந்துக்கு எதிராக 11 சதங்களை அடித்து சச்சின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். ஸ்மித் தனது கெரியர் முடிவதற்குள் 3 ஆஷஸ் தொடரில் ஆடினால் கூட டான் பிராட்மேனின் ரெக்கார்டையே தகர்த்துவிடுவார். 

4. ஆஷஸ் தொடரில் அதிகமுறை 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன்(5 முறை), அடுத்த இடத்தை ஜாக் ஹோப்ஸுடன்(3 முறை) பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்மித்(3 முறை). ஸ்மித் இந்த ஆஷஸ் தொடரில் நான்கே இன்னிங்ஸ்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (2 சதங்கள், ஒரு இரட்டை சதம், 92 ரன்கள்)

5. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் லிஸ்ட்டில் இருக்கும் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட் ஆகிய நால்வரில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். ஸ்மித் 26 சதங்கள் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கோலி ஒரு சதம் கூட அடிக்காததால் 25 சதங்களிலேயே நிற்கிறார். ஸ்மித் அவரை முந்திவிட்டார். வில்லியம்சன் 20 சதங்கள் மற்றும் ரூட் 16 சதங்கள் அடித்துள்ளனர். 

6. ஆஷஸ் டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் 8 இரட்டை சதங்களுடன் டான் பிராட்மேன் தான் முதலிடத்தில் உள்ளார். ஹாமண்ட் 4 இரட்டை சதங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கும் நிலையில், ஸ்மித் 3 இரட்டை சதங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.