இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

சவுத்தாம்ப்டனில் நடந்த கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 145 ரன்கள் அடித்தது. 146 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு ஆறுதல் வெற்றியாக இருந்தாலும், இந்த போட்டியில் வென்றதால் தான் ஐசிசி டி20 தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. இல்லையெனில், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கும். 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் மொயின் அலியின் கேட்ச்சை ஸ்டீவ் ஸ்மித் பிடித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த போட்டியில் 23 ரன்கள் அடித்த மொயின் அலி, மிட்செல் ஸ்டார்க் வீசிய 17வது ஓவரின் ஐந்தாவது பந்தை தூக்கியடிக்க, அதை பவுண்டரி லைனில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் செய்தார். கள நடுவர் அவுட் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைனில் பிடிக்கப்பட்டதால், எதற்கும் அதை சோதிக்குமாறு தேர்டு அம்பயரிடம் கோரினார். அந்த கேட்ச்சின் காணொலியை அனைத்து கோணங்களிலும் பரிசோதித்த தேர்டு அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார்.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் பந்தை பிடிக்கும்போது, அவரது கால் பவுண்டரி லைனை மிதிப்பது போன்று தெரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுண்டரி லைனை அவர் மிதித்துவிட்டது தெரியும்.. ஆனாலும் அவர் அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளவில்லை. இது சர்ச்சைக்குரிய கேட்ச் என்று சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் எழுந்தது. 

 

ஆனால் தேர்டு அம்பயர் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்த பின்னரே அதற்கு அவுட் கொடுத்தார். எனினும் சர்ச்சை கிளம்பியது. ஸ்டீவ் ஸ்மித்தின் கால் பவுண்டரி லைனில் படுவது போன்றுதான் தெரிகிறதே தவிர, கால் படுவது உறுதியாக தெரியவில்லை. அது அவரது ஷூவின் நிழல்தானே தவிர, கால் பவுண்டரி லைனில் படவில்லை என்று முன்னாள் வீரர் மைக்கேல் ஆர்த்தெடான் தெரிவித்துள்ளார்.