ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்மித், பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் ஸ்மித். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித்தின் பேட்டிங், தற்போது வேற லெவலில் உள்ளது. ஆஷஸ் தொடரில் மிகவும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள், நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் மற்றும் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் என ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். 

ஆஷஸ் தொடரின் முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற 2 போட்டிகளிலும் ஸ்மித் தான் ஆட்டநாயகன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். அந்த வரிசையில், ஆஷஸ் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததன் மூலம் இன்சமாம் உல் ஹக்கின் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இன்சமாம் உல் ஹக் தான் இதுவரை முதலிடத்தில் இருந்துவந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 அரைசதங்களை அடித்த இன்சமாம் தான் முதலிடத்தில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 10 அரைசதங்களை அடித்த ஸ்மித், இன்சமாமின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார். 

இந்த ஆஷஸ் தொடரில் இதுவரை ஸ்மித் ஆடிய 6 இன்னிங்ஸ்களில் ஸ்மித் அடித்த ஸ்கோர் - 144, 142, 92, 211, 82, 80. இதற்கு முந்தைய 4 இன்னிங்ஸ்களிலும் 50 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார் ஸ்மித். அதுமட்டுமல்லாமல் ஸ்மித்தின் இந்த அரைசத பயணம் இன்னும் முடியவில்லை. அடுத்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 11 அரைசதங்களாகிவிடும். இதையே இனிமேல் வேறு எந்த வீரராவது முறியடிப்பாரா என்பது சந்தேகம் தான். ஏனெனில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஒன்றில் சொதப்பினால் கூட இந்த ரெக்கார்டு சாத்தியப்படாது.