ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸும் வார்னரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பர்ன்ஸ், டிரெண்ட் போல்ட்டின் பந்தில் கிளீன் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார். வார்னரை 41 ரன்களில் வாக்னரும், அரைசதம் அடித்த லபுஷேனை 63 ரன்களில் டி கிராண்ட் ஹோமும் வீழ்த்தினர். 

Also Read - போல்ட்டின் பந்தில் கிளீன் போல்டான ஜோ பர்ன்ஸ்.. செம பவுலிங் வீடியோ

வழக்கம்போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிய ஸ்மித், அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஸ்மித், சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்த மேத்யூ வேட், 38 ரன்களில் டி கிராண்ட் ஹோமின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிவருகிறார். இந்த போட்டியில், ஸ்மித் களத்திற்கு வந்து, ஒரு ரன்னுடன் களத்தில் இருந்த நிலையில், 2 சம்பவங்கள் நடந்தன. 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் அடித்திருந்த நிலையில், அந்த சம்பவங்கள் நடந்தன. 

Also Read - ஸ்டீவ் ஸ்மித் எட்டிய மற்றுமொரு மைல்கல்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த ஸ்மித்

நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் வாக்னர் வீசிய பந்து, ஸ்மித்தின் இடுப்புப்பகுதியில் பட்டு சென்றது. அதற்கு ஸ்மித்தும் லபுஷேனும் ஒரு ரன் ஓடினர். ஆனால் அம்பயர் அதை டெட் பாலாக அறிவித்தார். அதாவது ஐசிசி விதிப்படி, ஒரு பேட்ஸ்மேன், பந்தை அடிக்க முயற்சியே செய்யாமல் நிராயுதபாணியாக நின்று, அந்த பந்து அவர் உடம்பில் பட்டு சென்றால், அதற்கு ரன் ஓடக்கூடாது. அதேவேளையில், பந்தை அடிக்க முயன்று, அந்த பந்து பேட்டில் படாமல் உடம்பில் பட்டால் ரன் ஓடலாம். இதுதான் விதி.

வாக்னரின் பந்தை ஸ்மித் ஆடும் முனைப்பில்தான் எதிர்கொண்டார். ஆனால் பந்து லெக் திசையில் நல்ல லெந்த்தில் வந்ததால் அவரால் அடிக்க முடியவில்லை. அந்த பந்து இடுப்புப்பகுதியில் பட்டு சென்றது. அதை அடிக்க முயற்சி செய்த காரணத்தால்தான் ஸ்மித் ரன்னும் ஓடினார். ஆனால் அம்பயர் அதை டெட் பாலாக அறிவித்துவிட்டார். அதேமாதிரி மற்றொரு சம்பவம் நடந்தது. அதற்கும் அம்பயர் டெட் பால் கொடுத்துவிட்டார். அதனால் அதிருப்தியடைந்த ஸ்மித், அம்பயர் நைஜல் லாங்கிடம் முறையிட்டார். ஆனாலும் அம்பயர் அந்த இரண்டையுமே டெட் பாலாக அறிவித்துவிட்டார். 

இந்த விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஆதரவாக ஷேன் வார்னே உள்ளிட்ட சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேடிச், அந்த இரண்டு சம்பவத்தில், ஒன்றில், ஸ்மித் ரன் ஓடியது செல்லும். ஆனால் இன்னொரு பந்து டெட் பாலாக அறிவிக்கப்பட்டது சரிதான் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கள நடுவர்கள் கவனத்துடன் செயல்படுவதில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிறது. சமீபகாலத்தில் அம்பயர்கள் அதிகமான முறை தவறாக முடிவுகளை வழங்குகின்றனர். கள நடுவர்களின் தரம் குறைந்துவருவதாக கடும் விமர்சனம் இருந்துவரும் நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.