பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்துள்ள இலங்கை அணி, மொத்தமாக 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி காலேவில் தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் அடித்தது. இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. ஓபனிங்கில் ஒஷாடா ஃபெர்னாண்டோ (35) மற்றும் பின்வரிசையில் மஹீஷ் தீக்ஷனா (38) ஆகிய இருவரும் சிறிய பங்களிப்பு செய்தனர்.
இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தனி நபராக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாபர் அசம் 119 ரன்களை குவித்தார். பாபரின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 218 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அடித்த 218 ரன்களில் 119 ரன்கள் பாபர் அசாம் அடித்தது. எஞ்சிய 99 ரன்கள் தான் மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து அடித்தது.
4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, பெரிய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்த இன்னிங்ஸில் சுதாரிப்பாக பேட்டிங் ஆடியது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஃபெர்னாண்டோ 64 ரன்கள் அடித்தார். திமுத் கருணரத்னே (16) மற்றும் ரஜிதா (7) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். குசால் மெண்டிஸ் 76 ரன்கள் அடித்தார்.
இதையும் படிங்க - சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு.!
அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வா (20), நிரோஷன் டிக்வெல்லா (12), ரமேஷ் மெண்டிஸ்(22), மஹீஷ் தீக்ஷனா(11) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த தினேஷ் சண்டிமால் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த தினேஷ் சண்டிமால் 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறார்.
3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் அடித்துள்ளது. தினேஷ் சண்டிமால் 86 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரபாத் ஜெயசூரியா களத்தில் உள்ளார். மொத்தமாக 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இலங்கை அணி.
