பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரை 1-1 என சமன் செய்தது. 

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலேவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது. முதல் டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடிய தினேஷ் சண்டிமால் இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி 80 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ (50) மற்றும் பின்வரிசையில் டிக்வெல்லா(51) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். கருணரத்னே (40), மேத்யூஸ்(42) ஆகியோரும் பங்களிப்பு செய்ய முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது இலங்கை அணி.

இதையும் படிங்க - WI vs IND: வெஸ்ட் இண்டீஸை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம்(16), முகமது ரிஸ்வான் (24) ஆகியோர் ஏமாற்றமளிக்க, இமாம் உல் ஹக் (32), அப்துல்லா ஷாஃபிக்(0) ஆகியோரும் சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் அகா சல்மான் மட்டும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சல்மான் 62 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்ப வெறும் 231 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது பாகிஸ்தான் அணி.

147 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் டாப் ஆர்டர் மற்றும் 3,4,5 ம் வரிசை பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பின்வரிசையில் கேப்டன் கருணரத்னே மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினார்கள். கருணரத்னே அரைசதம் (61) அடித்தார். தனஞ்செயா டி சில்வா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 109 ரன்களை குவித்தார். ரமேஷ் மெண்டிஸும் 45 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களை குவித்தது இலங்கை அணி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்! அதில் அந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும்- பாண்டிங் ஆருடம்

507 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி, 508 ரன்கள் என்ற கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. 508 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி 81 ரன்களை குவித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி.

இதையடுத்து 2வது டெஸ்ட்டில் 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 1-1 என தொடரை சமன் செய்தது.