ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. ஐபிஎல்லில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர்.

இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதற்கு கேகேஆர், பஞ்சாப், டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வார்னர் திரும்பியிருப்பது கூடுதல் பலம். மேலும் இந்த சீசனில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. அவரும் தன் மீதான நம்பிக்கையை ஏமாற்றாமல் அபாரமாக ஆடினார். வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 4ல் வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. அந்த அணி அடித்த ரன்களில் சுமார் 70 சதவிகிதம் ரன்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் அடித்ததுதான். அந்தளவிற்கு சன்ரைசர்ஸ் அணி தொடக்க வீரர்களை சார்ந்துள்ளது. அதை உணர்ந்து இவர்களும் நன்றாக ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் ஒரு ஒருநாள் போட்டியிலும் அதன்பின்னர் உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளது. அதனால் வரும் 23ம் தேதியுடன் பேர்ஸ்டோ இங்கிலாந்து திரும்ப உள்ளார். சன்ரைசர்ஸ் அணி அடுத்ததாக மோதும் கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு எதிரான போட்டியுடன் பேர்ஸ்டோ இங்கிலாந்து திரும்ப உள்ளார். 

சன்ரைசர்ஸ் அணிக்காக இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள பேர்ஸ்டோ, ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 365 ரன்களை குவித்துள்ளார். பேர்ஸ்டோவின் இழப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு இழப்புதான் என்றாலும் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத அளவிற்கு அந்த அணி பேக்கப்பை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்டில் அணியில் உள்ளார். பேர்ஸ்டோ சிறப்பாக ஆடிக்கொண்டிருந்ததால் கப்டிலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பேர்ஸ்டோ சென்றுவிட்டால் கப்டிலுக்கு வாய்ப்பு கிடைக்கும். கப்டிலும் சிறந்த அதிரடி வீரர் என்பதால் சன்ரைசர்ஸ் அணிக்கு பேர்ஸ்டோவின் இழப்பு பாதிப்பை ஏற்படுத்தாது.