பஞ்சாப் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேஷ் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரான் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (8) மற்றும் பிரப்சிம்ரான் சிங் (14) ஆகிய இருவருமே ஏமாற்றமளிக்க, 3ம் வரிசையில் இறங்கிய பேர்ஸ்டோவும் 12 ரன்னில் நடையை கட்டினார். அதன்பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் ஜித்தேஷ் ஷர்மா 11 ரன்னிலும், ஷாருக்கான் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாருக்கான் 28 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக பந்துவீசி ஏற்கனவே தவான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருந்த புவனேஷ்வர் குமார், 33 பந்தில் 60 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டோனையும் வீழ்த்தினார். 19 ஓவரில் பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அந்த ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் ஒடீன் ஸ்மித், ராகுல் சாஹர், வைபவ் அரோரா ஆகிய மூவரையும் வீழ்த்த, அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசியதால், 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் அணி. 152 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 152 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வில்லியம்சன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா 31 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 22 பந்தில் 34 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் மார்க்ரம் (41*), பூரன் (35*) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை சன்ரைசர்ஸ் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் வென்றார். இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.