2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. 

அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. இதையடுத்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர்  ஏற்கனவே பலமுறை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் அதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் தோனியும் இந்திய அணியும் ஆடிய விதமும் வியப்பளித்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். தோனியின் பேட்டிங் நோக்கமற்றதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அப்துல் ரசாக் மற்றும் முஷ்டாக் அஹமது ஆகியோர், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக மறுபடியும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில், ஓராண்டுக்கு பின் உலக கோப்பை போட்டி குறித்த விஷயத்தை கொளுத்திப்போட்டு, இந்திய அணி மற்றும் தோனி மீதான விமர்சனத்துக்கு வழிவகுத்துவிட்ட பென் ஸ்டோக்ஸை ஸ்ரீசாந்த் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ஸ்ரீசாந்த், பென் ஸ்டோக்ஸ் அவரது கெரியரில் இனிமேல், தோனிக்கு எதிராக ஆடக்கூடிய சூழல் வரக்கூடாது என நான் விரும்புகிறேன். அதற்காக நான் பிரார்த்தனையும் செய்கிறேன். ஏனெனில் தோனி இதுமாதிரியான விமர்சனங்களை அவ்வளவு எளிதாக மறக்கக்கூடிய நபர் அல்ல.

எனவே ஐபிஎல்லிலோ அல்லது இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியிலோ தோனிக்கு எதிராக ஸ்டோக்ஸ் ஆடக்கூடிய சூழல் வந்தால், கண்டிப்பாக ஸ்டோக்ஸை தண்டித்துவிடுவார் தோனி. ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கலாம். ஆனால் தோனியை அவரால் வீழ்த்தமுடியாது என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.