இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை. உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம் வலுத்தபோதிலும், தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். 

அவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்து டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது. 

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோனி ஆடுவது குறித்தும், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

கிரிக்கெட் அடிக்ட்டர் ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்த ஸ்ரீசாந்த், டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தோனி குறித்து பேசிய ஸ்ரீசாந்த், டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே ஐபிஎல் நடக்கும் என நினைக்கிறேன். தோனி ஐபிஎல்லில் அசத்துவார். தோனி அவரது கெரியரி குறித்து எதையும் பேசாமல் அமைதி காக்கிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் தோனிக்கு அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியும்.

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரே முடிவு செய்வார். டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை. 2011 உலக கோப்பையை வென்ற தினத்தை சச்சின் நினைவுகூர்ந்து மெச்சுவதைப்போல், டி20 உலக கோப்பையை வென்றால், அது தோனிக்கு மறக்கமுடியாத தினமாக மாறும். டி20 உலக கோப்பையை வென்று, தோனி வீரர்களின் தோள்மீது உலா வர வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.