சூதாட்டப்புகார் குற்றச்சாட்டிலிருந்து வெளிவந்து தான் ஒரு நிரபராதி என நீதிமன்ற தீர்ப்பை பெற்று கெத்தாக வலம்வரும் ஸ்ரீசாந்த், தன் மீது முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பாடி அப்டான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார். 

2013ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவின் பாடி அப்டான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஸ்ரீசாந்தை சேர்க்காததற்காக, தன்னிடம் மிகவும் மோசமாகவும் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பாடி அப்டான் தனது சுயசரிதையில் எழுதியிருந்தார். 

ஆனால் உண்மையாகவே என்ன நடந்தது? சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ஆட அடம்பிடித்தது ஏன் என ஸ்ரீசாந்த் விளக்கியுள்ளார். இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் ஸ்ரீசாந்த் விளக்கமாக பேசியுள்ளார். 

”எனக்கு சிஎஸ்கே அணியை பிடிக்காது. இந்த விஷயம் எல்லாருக்குமே தெரியும். நான் அந்த அணிக்கு எதிராக ஏற்கனவே சிறப்பாக ஆடியிருந்ததால், அந்த குறிப்பிட்ட போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கேட்டேன். சிஎஸ்கே அணியை பிடிக்காது என்றவுடன் தோனியை பிடிக்காது என்றோ அந்த அணியின் ஓனர் ஸ்ரீனிவாசனை பிடிக்காது என்றோ அர்த்தமல்ல. எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்காது. அதுதான் காரணம். அதனால்தான் எனக்கு ஆஸ்திரேலிய அணி மீது எப்போதுமே ஒரு வெறுப்பு” என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.