ஐபிஎல்லில் ஹர்பஜனிடம் அடி வாங்கியது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் பாடி அப்டானுடன் பிரச்னை, சூதாட்டப்புகார் என தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீசாந்த். இதில் சூதாட்டப்புகார் தான் அவரை மிகவும் பாதித்தது. ஆனால் அதிலிருந்து ஒருவழியாக மீண்டு, தான் எந்த தவறும் செய்யவில்லை என நிரூபித்து தன் மீதான கலங்கத்தை துடைத்துள்ளார். 

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாடி அப்டானின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீசாந்த் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். 2013-2015 காலக்கட்டத்தில் பாடி அப்டான் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஸ்ரீசாந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னை ஆடவைக்குமாறு அடம்பிடித்ததாகவும் அதற்காக தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தனது சுயசரிதையில் எழுதியிருந்தார் பாடி அப்டான். 

இந்நிலையில், இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸுக்கு ஸ்ரீசாந்த் அளித்துள்ள பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், மிஸ்டர் அப்டான்.. உங்கள் மனதில் கை வைத்து, உங்கள் குழந்தைகளின் தலையில் சத்தியம் செய்து சொல்லுங்கள்.. நான் உங்களிடம் அத்துமீறியோ அல்லது மோசமாகவோ நடந்துகொண்டேனா..? இதுகுறித்து நான் பெரிய மதிப்பும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் லெஜண்ட் ராகுல் டிராவிட்டிடம்(ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டன்) கேட்க விரும்புகிறேன். நான் பாடி அப்டான் அவரது புத்தகத்தில் கூறியவாறு, அவரிடம் நடந்துகொண்டேனா?

நடந்தது என்னவென்றால்.. சிஎஸ்கேவிற்கு எதிரான அந்த குறிப்பிட்ட போட்டியில் நான் ஆடவேண்டும். அதனால் என்னை அந்த போட்டியில் ஆடவையுங்கள் என்று அப்டானிடம் நிறைய முறை கெஞ்சி கேட்டேன். ஏனென்றால், நான் சிஎஸ்கேவை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் ஏற்கனவே சிஎஸ்கேவிற்கு எதிராக நன்றாக ஆடியிருக்கிறேன். அதனால் சிஎஸ்கேவிற்கு எதிராக நன்றாக ஆடி அந்த அணியை வீழ்த்த வேண்டும் என நினைத்தேன். எனக்கு சிஎஸ்கேவை பிடிக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு தோனியோ, அந்த அணியின் ஓனர் ஸ்ரீனிவாசனோ காரணமில்லை. ரொம்ப சிம்பிள்.. எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்காது. அதனால் சிஎஸ்கேவை பிடிக்காது. அதுதான் நான் ஆஸ்திரேலிய அணியை எப்போதுமே வெறுப்பதற்கும் காரணம். அதனால் தான் அந்த போட்டியில் என்னை ஆடவைக்குமாறு கெஞ்சி கேட்டேன். 

ஆனால் அதன் பிரதிபலனாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் மோசமானது. இப்போதும் என் மனதை கலங்கடிக்கிறது என்று ஸ்ரீசாந்த் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.