2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரால் வாழ்நாள் தடை பெற்ற இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. தடை முடியவுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தனது மாநில அணியான கேரள அணிக்கும், மீண்டும் தேசிய அணியிலும் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

தடை முடியவுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், ஊடகங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் இணையதளங்களுக்கும் பேட்டியளித்துவருகிறார். 

அந்தவகையில் ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், 2020 டி20 உலக கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குவது இன்னும் உறுதியாகவில்லை. உலக கோப்பை தொடர் தள்ளிப்போவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஸ்ரீசாந்த் டி20 உலக கோப்பைக்கான தனது அணியை தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஜோடியாக ஷிகர் தவான் அல்லது சஞ்சு சாம்சன் இறங்கலாம் என தெரிவித்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரர் கேப்டன் விராட் கோலி. நான்காம் வரிசை வீரராக முன்னாள் கேப்டனும் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனியை தேர்வு செய்துள்ள ஸ்ரீசாந்த், ரெய்னாவை ஆறாம் வரிசைக்கும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக ஹர்பஜன் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்ட நிலையில், அவரால் இன்னும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆடமுடியும் என ஸ்ரீசாந்த் நம்புகிறார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனி மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஸ்ரீசாந்த், 12வது வீரராக தனது பெயரை தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களை ஸ்ரீசாந்த் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. 

ஸ்ரீசாந்த் தேர்வு செய்த 2020 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான்/சஞ்சு சாம்சன், விராட் கோலி, தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, பும்ரா.

12வது வீரர் - ஸ்ரீசாந்த்