மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் அதிரடி சதம் விளாசினார்.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கவுகாத்தியில் உள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.
கேப்டன் லாரா வால்வார்ட் அதிரடி சதம்
அந்த அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் அதிரடி சதம் விளாசி பிரம்மிக்க வைத்தார். வெறும் 143 பந்துகளில் 20 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 169 ரன்கள் குவித்தார். டாஸ்மின் பிரிட்ஸ் (45) மற்றும் மாரிசான் காப் (42) ஆகியோரும் சிறப்பாக விளையாடினார்கள். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
பின்பு இலாமய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் சென்றது. தென்னாப்பிரிக்கா வீராங்கனை மாரிசேன் காப் 7 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். நாடின் டி கிளார்க் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியில் கேப்டன் நடாலி ஸ்கிவர் பிரெண்ட் (64) மற்றும் ஆலிஸ் கேப்சி (50) மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா பைனலுக்கு செல்லுமா?
நாளை (வியாழக்கிழமை) நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும். பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
