Asianet News TamilAsianet News Tamil

டிகாக் - ஹென்ரிக்ஸ் அபார பேட்டிங்.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 121 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி 15வது ஓவரிலேயே அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.
 

south africa whitewashed sri lanka in t20 series
Author
Colombo, First Published Sep 14, 2021, 10:09 PM IST

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை வென்றது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா பொறுப்புடன் ஆடி 39 ரன்கள் அடித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(12), தனஞ்செயா டி சில்வா(1), பானுகா ராஜபக்சா(5), காமிண்டு மெண்டிஸ்(10) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஷனாகா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 10ம் வரிசையில் இறங்கிய சாமிகா கருணரத்னே, 2 சிக்ஸர்களை விளாசி 24 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 120 ரன்கள் அடித்த இலங்கை அணி, 121 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

121 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக்கும் ரீஸா ஹென்ரிக்ஸும் இணைந்து அருமையாக ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவருமே அரைசதம் அடித்து, விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு அபார வெற்றியை பெற்று கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios